2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி ஆஃபரை வெளியிட்டார் விஜய். இது திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் தங்களை நோக்கி வரும் என விஜய் நம்பினார். ஆனால், யதார்த்தம் வேறாக அமைந்தது.
காங்கிரஸ் மீண்டும் திமுக-வுடனேயே பயணிக்க முடிவு செய்தது, விஜய்யின் ஆரம்பகட்ட வியூகத்துக்குப் பின்னடைவாக அமைந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக-வின் வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டால், மற்ற கட்சிகள் தவெக பக்கம் தலைவைக்கத் தயங்கின. இது ஒருபுறமிருக்க, சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க தவெக போட்ட திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
இது குறித்து விவாதிக்க, நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒரு வேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (மார்ச் 14) விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று இரவு டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும்.