தமிழகம்

மயிலம் தொகுதியில் திமுக - அதிமுக போட்டி?

கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பே தீவிரம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திமுக மற்றும் அதிமுக திணறி வருகிறது. ராமதாஸ் தரப்பு பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளால் குழப்பம் தொடர்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட உள்ளார். இதற்கான கட்டமைப்பு பணிகளை அவரும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் செய்துவிட்டனர்.

          

இதனால், மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான அன்புமணி தரப்பு பாமகவைச் சேர்ந்த சிவக்குமார், விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்க இருக்கிறார்.

இதற்கிடையில் திமுக சார்பில் போட்டியிட மதிமுக வரவான முன்னாள் எம்எல்ஏவும், கடந்த முறை (2021-ல்) போட்டியிட்டு தோல்வியை சந்தித்த மாசிலாமணி, தேமுதிக வரவான திமுக தலைமை தீர்மானக் குழு உறுப்பினரும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆதரவாளருமான செஞ்சி சிவா (2011-ல் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தவர்) மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சேகர் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால், மயிலம் தொகுதியில் திமுக மீண்டும் போட்டியிடும் என்ற நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் வலம் வருகின்றனர். இதன் எதிரொலியாக, மயிலம் ஒன்றியம் டி.கேணிப்பட்டு கிராமத்தில் ‘நமது சின்னம், எங்கள் சின்னம் உதயசூரியன்’ என சுவர் விளம்பரம் செய்யும் பணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து டி.கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும், வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளரான செந்தில்குமார் கூறும்போது, “மயிலம் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது.

மயிலம் தொகுதியில் திமுக மீண்டும் போட்டியிடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொண்டர்கள் ஆர்வத்துடன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை சுவர் விளம்பரம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்” என்றார்.

திமுக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு எட்டாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக போட்டியிடுவதை உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உறுதி செய்து விட்டனர். இவர்களது ஆரூடம் நிறைவேறுவது, இரு கட்சிகளின் தலைமையின் முடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT