மதுரை: அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியில் ‘சீட்’ கிடைக்காது என்று தெரிந்து தவெக-வில் சேர்ந்தவுடனே வேட்பாளரான சுவாரசியம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. அதனால், நீண்ட காலம் விஜய் ரசிகராகவும், அவரது மக்கள் இயக்கத்திலும் பணியாற்றியோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதில் மதுரை வடக்கு அ.கல்லானை, மதுரை மேற்கு எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, உசிலம்பட்டி எஸ்ஓபி.விஜய்மகாலிங்கம், திருமங்கலம் நா.சதீஷ்குமார் ஆகியோரை தவிர மற்றவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெக-வில் இணைந்தவர்கள். ஆனால், இவர்களுக்கு விஜய் ‘சீட்’ வழங்கியுள்ளார்.
சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ வீ.கருப்பையா ‘சீட்’ கேட்டார். அவருக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டு மாணிக்கத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிருப்தியடைந்த வீ.கருப்பையா தவெக-வில் சேர்ந்த உடனே சோழவந்தானில் ‘சீட்’ வழங்கப்பட்டது.
மதுரை மத்தியில் தவெக வேட்பாளர் விஎம்எஸ்.முஸ்தபா, தொடக்க காலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் நிறுவனத் தலைவராக இருந்தார். தவெகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார். இவரது சொந்த ஊர் உத்தமபாளையம்.
சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால், சொந்த ஊர் அல்லது வசிப்பிடமான சென்னையில் ‘சீட்’ வழங்காமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மதுரை மத்தியில் விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். கேட்காமலேயே இவரது கட்சிப்பணியை பார்த்து முஸ்தபாவுக்கு விஜய் ‘சீட்’ வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலூர் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அ.மதுரைவீரன் இளைஞர் காங்கிரஸில் கட்சியில் மேலூர் ஒன்றிய துணைத் தலைவராக இருந்தவர். தவெகவில் 7 மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது பிடிக்காததால் தவெக-வில் இணைந்த இவருக்கும் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சோ.கார்த்திகேயன், திமுகவில் திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளரா கவும், கவுன்சிலராகவும் பணியாற்றிவர். இவர் கடந்த ஜனவரியில் தவெக-வில் இணைந்தார். இவருக்கு தொகுதி மாறி கிழக்கு தொகுதியில் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
சிடிஆர்.நிர்மல்குமாராவது தவெக தொடங்கியவுடன் அதிமுகவில் இருந்து விலகி, அக்கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். அதனால், அவருக்கு தவெகவில் ‘சீட்’ கிடைத்துள்ளது. அவரது சொந்தத் தொகுதியான உசிலம் பட்டியில் வழங்கப்படவில்லை.
இப்படி மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் 4 பேருக்கு மட்டுமே தவெக தலைவர் விஜய் ‘சீட்’ வழங்கியுள்ளார். மற்ற 6 பேரும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களாக உள்ளனர். மேலும், அவர்களில் பலர் வெளியூர் தொகுதிகளாக இருந்தும் தொகுதி மாறி தவெக- சார்பில் போட்டியிடுகின்றனர்.
ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்க மாணவர் மன்ற பொறுப்பில் பணியாற்றிய பலருக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகம் முழுவதுமே இதுபோல், மாற்றுக்கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு விஜய், தவெகவில் வேட்பாளராக வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தவெக-வில் வேட்பாளர்களுக்கு பற்றாக்குறையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், திமுக, அதிமுக வினரை தேர்தலில் சமாளிக்க அரசியல் அனுபவம் வேண்டும் என்ற அடிப்படையில் விஜய் அவர்களுக்கு ‘சீட்’ வழங்கியிருக்கலாம் என்று அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.