ஈரோடு: கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டில் வெடிவிபத்து நிகழ்ந்ததாக வெளியான செய்தி வதந்தி என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸார் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் பகுதியில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பூர்வீக வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே உறவினரான மனோஜ்ராஜ் (43) என்பவரின் வீடும் உள்ளது. நேற்று முன்தினம் நடிகர் ராஜ்குமாரின் பூர்வீக வீட்டில் வெடி விபத்து நிகழ்ந்ததாக தகவல் பரவியது.
தாளவாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நடிகர் ராஜ்குமாரின் உறவினரான மனோஜ்ராஜ் தனது குடும்பத்தினருடன் தீபாவளியன்று பட்டாசு வெடித்தார்.
அதேநேரத்தில் வீட்டின் அருகேயுள்ள கோயில் விழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வுகளால் மனோஜ்ராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது. இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டில் வெடி விபத்து நிகழ்ந்ததாக வதந்தி பரப்பி உள்ளனர். இவ்வாறு கூறினர்.