ஆண்டிபட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடுத்தடுத்து இணையும் கட்சிகள் தேனி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை பங்கீடு செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால் அதிமுகவினர் கலக்கம் அடைந் துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது காங்கிரஸின் பிடியில் இருந்த நிலையில், படிப்படியாக இவற்றை திராவிட கட்சிகள் கைப்பற்றத் தொடங்கின. தற்போது நான்கில் 3 தொகுதிகள் திமுக வசம் உள்ளது.
அதிமுகவைப் பொறுத் தளவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆளுமை இருந்த போதிருந்த நிலை தற்போது முற்றிலும் மாறி விட்டது. பழனிசாமி ஆதரவாளர்கள் தற்போது உயர் நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ளனர். மாவட்ட செயலாளர்களாக உயர்ந்ததுடன் வரும் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் அளவுக்கு களப்பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்தது. அக்கட்சி ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது கூட்டணியில் உள்ள பாஜக கம்பம் தொகுதியை குறிவைத்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் இக்கூட்டணிக்கு வந்தால் போடி தொகுதியை கேட்கும் நிலை உள்ளது.
இருக்கும் 4 தொகுதி களையும் கூட்டணி கட்சிகள் குறி வைப்பதால் அதிமுக தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், சீட் மற்றும் தொகுதி ஒதுக்கீடு இன்னமும் முடியவில்லை.அதிமுகவில் முன்பு அனைவரும் ஒன்றாக இருந்தபோது கட்சிக்கான வாக்கு சதவீதம்தான் வெற்றியை தீர்மானித்தது.
தேனியை மையப்படுத்தி பலரும் அரசியல் செய்ததால் அவர்களுக்கு இங்குள்ள தொகுதிகள் மீது ஈர்ப்பு இருப்பது நியாயம்தான். ஆனால் இரட்டை இலை சின்னத்துக்கே வாக்கு வங்கி அதிகம். மாவட்டத்தில் அதிகப்படியான தொகுதியில் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும் என்றனர்.