கமுதி கோட்டைமேடு அருகே சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்க நடத்தப்பட்ட பந்தக்கால் நடும் நிகழ்ச்சி.
ராமநாதபுரம்: பிப்.24-ல் பசும்பொன்னில் சசிகலா தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக அவரது ஆதரவாளர்களால் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவின் பொதுச்செயலாளரான வி.கே.சசிகலா, 2017-ல் ஊழல் வழக்கில் சிறை சென்றதால், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அதன்பின் டிடிவி.தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
2021-ல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை. அதன் பின்னரும் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஓரணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என கூறி அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் இணைக்கப்படுவர் என எதிர்பார்த்தனர். ஆனால் சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்.
அமைதியாக இருந்த சசிகலா கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த அண்ணா பிறந்தநாளின்போது திமுகவை வீட்டுக்கு அனுப்பி மக்கள் விரும்பும் ஆட்சியை கொண்டு வருவேன் என்றார். கடந்த வாரம் முதல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
அதிமுகவில் தனக்கு இடமில்லை எனத் தெரிந்துவிட்டதால் சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதுவரை பொது வெளியில் கூட்டம், மாநாடு போன்ற எதையும் நடத்தாத சசிகலா, வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்த உள்ளார்.
இதற்காக பசும்பொன் அருகே கோட்டைமேடு பகுதியில் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று (பிப்.15) காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து பசும்பொன் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் அங்குள்ள மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை, சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகிய ஜீவிதா நாச்சியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை பேசும்போது, "இப்பொதுக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படும்" என்றார்.
பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான பசும்பொன் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் கூறும்போது, "வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது. புதிய கட்சி தொடங்குகிறாரா? வேட்பாளர் அறிவிப்பா?, கூட்டணி ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு சசிகலா தான் தெரிவிப்பார்" என கூறினார்.