ஸ்ரீரங்கம் கோயில் முன்பு மூடப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பு அறை.

 

படம்: ர.செல்வமுத்துகுமார்

தமிழகம்

கோயில்களில் செல்போன் தடை திட்டத்துக்கு மூடுவிழா?

பக்தர்கள் எதிர்ப்பின் தாக்கம்

என்.மாதவன்

திருச்சி: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அமல்படுத்தப்பட்ட செல்போன் தடை திட்டத்துக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அத்திட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், சுவாமி தரிசனத்தின்போது பக்தர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள 52 முக்கியக் கோயில்களில் கடந்த செப்.1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

இதற்காக கோயில்களில் செல்போன் வைப்பறைகள் அமைக்கப்பட்டு, ஒரு செல்போனுக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைக்கவும், மீண்டும் பெறவும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று

செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்.

ஏற்கெனவே கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில், செல்போன்களை வைப்பறையில் வைக்கவும், எடுக்கவும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மட்டும் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், யாரோ சிலர் செய்யும் தவறுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களை அலைக்கழிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, பக்தர்கள் செல்போன்களை வைப்பறையில் வைப்பதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், தாமாக முன்வந்து தருபவர்களிடம் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் எனவும், கோயில்களுக்குள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் எனவும் கோயில் செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத் துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் முன்பு போலவே எவ்வித தடையும் இல்லாமல் செல்போன்களை எடுத்துச் சென்று வருகின்றனர். இதனால், ஸ்ரீரங்கம் கோயிலிலில் செல்போன் வைப்பறைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. மேலும், கோயிலுக்குள் பக்தர்கள் முன்பு போலவே செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

இதனால், கோயில்களில் செல்போன் தடை திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா? என்பதை இந்து சமய அறநிலையத் துறை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளும், திட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என குழப்பத்தில் உள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT