திருவள்ளூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சோடியம் குளோரைடு பாட்டிலில் கழிப்பறை குழாய் நீர் கலந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் கடந்த 22-ம் தேதி இரவு குடும்பத் தகராறு காரணமாக, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற லோகேஷ், மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அதிகாலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற, நீரில் சோடியம் குளோரைடு கலந்து அதை அவரது மூக்கில் டியூப் வைத்து அதன்மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த தண்ணீர் மருத்துவமனை கழிப்பறை குழாய் தண்ணீர் என, லோகேஷ் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் தரப்பிலோ, கழிப்பறை அருகே உள்ள குழாய் நீரில்தான் சோடியம் குளோரைடுடன் கலக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கழிப்பறை குழாய் நீரை ஊற்றியதாக லோகேஷ் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், போலீஸாரை வரவழைத்து சம்பவம் குறித்து தெரிவித்து விட்டு, லோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.
தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் லோகேஷ் தரப்பினர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ``சோடியம் குளோரைடு பாட்டிலில் கழிப்பறை குழாய் நீரை தூய்மைப் பணியாளர் கலந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். மருத்துவக் கல்வி இயக்குநரக குழுவின் விசாரணைக்குப் பிறகு தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.