பழனிசாமியின் பிடிவாதத்தால் தனிக் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்த ஓபிஎஸ்ஸை அமித் ஷா அவசரமாக டெல்லிக்கு அழைத்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏகத்துக்கும் ஊகங்களை உலவ விட்டிருக்கிறது.
மிகச் சாமானியனான தன்னை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ஜெயலலிதாவுக்கு கடைசி வரைக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் ஓபிஎஸ். அதனால் தான் முதல்வருக்கான இருக்கையில் கூட முழுதாய் உட்கார்ந்து விடாமல் நுனியில் அமர்ந்து பணிவுக்கே பணிவு காட்டினார். அன்றைக்கு அப்படி அம்மாவின் சொல்லைக் கேட்டு நடந்த ஓபிஎஸ் தான் தற்போது அமித் ஷாவின் சொல்லுக்கு ஆடுவதாக ஆதங்கப்படுகிறார்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தின் இயக்குநர்களாக அமித் ஷாவும் ஆடிட்டரும் இருந்ததாகச் சொன்னார்கள். அது தான் தொடக்கம். அதன் பிறகு, “பிரதமர் கேட்டுக் கொண்டதால் அதிமுக-வுடன் மீண்டும் இணைந்தேன்” என்றார் ஓபிஎஸ். ஒரு கட்டத்தில் அங்கிருந்து மீண்டும் விலக்கப்பட்ட போதும் பாஜக-வின் பேச்சையும் அமித் ஷாவின் பேச்சையும் ஓபிஎஸ் தட்டவில்லை.
மூன்று முறை முதல்வராக இருந்த அவர், அமித் ஷா சொன்னதாலேயே மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரட்டை இலையை மூன்றா மிடத்துக்குத் தள்ளினார். அதன் பிறகாவது பழனிசாமி தன் மீது பரிவுகாட்டுவார் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை என்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். சரி, இனிமேலாவது சுயமாக முடிவெடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நல்லதொரு முடிவை எடுக்க பழனிசாமிக்கு ‘டிசம்பர் 15’ கெடுவை விதித்தார் ஓபிஎஸ்.
கெடு முடிவதற்கான நாட்கள் நெருங்கிய நிலையில் தான், மீண்டும் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்தார் அமித் ஷா. பாஜக-வுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்தவர், அமித் ஷா அழைக்கிறார் என்றதும் டெல்லிக்குப் பறந்தார். டெல்லியில் ஓபிஎஸ்ஸுக்கு அமித் ஷா என்ன போதித்தார் என்று முழுமையாகத் தெரியாத நிலையில், அந்தப் போதனைகளை செயல்படுத்துவதுதான் இனி ஓபிஎஸ்ஸின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, ஓபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு குறித்து பலவிதமான ஊகங்கள் கிளம்பி இருக்கின்றன. “ஓபிஎஸ் தனிக்கட்சிக்கு தொடங்கு வதற்கு ஆசி வழங்கிவிட்ட அமித் ஷா, தேர்தலில் தங்களுக்கான கோட்டாவில் ஓபிஎஸ் கட்சிக்கும் இடமளிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இன்னொரு தரப்பிலோ, “ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் உள்ளே விட மறுக்கிறார் பழனிசாமி.
தினகரனோ, பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்கிறார். இந்தச் சிக்கலை தவிர்க்க, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்யலாம் என்ற கண்டிஷனை அதிமுக-விடம் முன்வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா. அதுபற்றி எல்லாம் பேசுவதற்காகத்தான் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். எனவே, 15-ம் தேதி புதுக் கட்சி தொடங்கினாலும் அமித் ஷாவின் கட்டளையை மீறி புரட்சிகரமான முடிவு எதையும் எடுத்துவிடமாட்டார் ஓபிஎஸ்” என்கிறார்கள்.
‘தாயின்றி தவிக்கிறது தமிழகம்’ என்று ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னைக்குள் அதிமுக பிரமுகர் ஒருவர் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார். தமிழகம் தவிக்கிறதோ இல்லையோ... அதிமுக தலைகள் அமித் ஷாவிடம் சிக்கிக் கொண்டு ரொம்பவே தவிக்கிறார்கள்.