தமிழகம்

பிரச்சாரத்துக்கு வரவே இல்லை.. - புதுச்சேரி காங்கிரஸில் நாராயணசாமி முடக்கப்படுகிறாரா?

செ.ஞானபிரகாஷ்

புதுச்​சேரி​யில் இருந்து டெல்லி தலைமை இடத்​துக்​குச் சென்​று, காங்​கிரஸில் தனித்​தடம் பதித்​தவர் நாராயண​சாமி. ஒரு காலத்​தில் கட்​சித் தலை​மையோடு நெருக்​க​மாக இருந்​தவர்.

கடந்த 1985-ல் மாநிலங்​களவை​யில் முதல்​முறை​யாக நுழைந்த நாராயண​சாமி, 1991, 2003-ம் ஆண்​டில் மாநிலங்​களவைக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். பின்​னர் 2009-ல் மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டு வென்​றார். அத்​துடன் மத்​திய அமைச்​ச​ராக​வும் நாராயண​சாமி வலம் வந்​தார். மன்​மோகன் சிங், சோனி​யா, ராகுலுடன் நெருக்​க​மாக இருந்து வந்​தார். பின்​னர் 2014 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டு தோற்​றார்.

          

தொடர்ந்து 2016-ல் புதுச்​சேரி மாநில அரசி​யலுக்​குள் வந்​தார். அப்​போது நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் அதிக இடங்​களில் வென்​றது. தேர்​தலில் போட்​டி​யி​டாத நாராயண​சாமி முதல்​வ​ரா​னார். பின்​னர் இடைத்​தேர்​தலில் வென்​றார்.

கடந்த 2021-ல் புதுச்​சேரி காங்​கிரஸில் இருந்து பல முக்​கி​யத் தலை​வர்​கள் வெளி​யேறி பாஜக மற்​றும் என்​.ஆர்​.​காங்​கிரஸில் இணைய காங்​கிரஸ் அரசு கவிழ்ந்​தது. கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்​வியைத் தழு​வியது. நாராயண​சாமி​யும் போட்​டி​யிட​வில்​லை. ஆனாலும், காங்​கிரஸில் தொடர்ந்து செயல்​பட்டு வந்​தார்.

இந்​தச் சூழலில், ஏப்​.9-ம் தேதி நடை​பெற உள்ள புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் களம் காண்​பவர்​களில் ஒரு​வரே முதல்​வர் வேட்​பாளர் என்று காங்​கிரஸ் தலைமை முடிவு எடுத்​தது. இதனால் தனது முந்​தைய தொகு​தி​யான நெல்​லித்​தோப்​பில் போட்​டி​யிட ஆர்​வம் காட்​டி​னார் நாராயண​சாமி. கடந்த சில மாதங்​களாக நலத்​திட்ட உதவி​களை​யும் வழங்கி வந்​தார். பல்​வேறு போராட்​டங்​களி​லும் பங்​கேற்​றார்.

ஆனால், யாரும் எதிர்​பா​ராத வகை​யில் முதல்​வர் வேட்​பாளர் போட்​டி​யில் புதுச்​சேரி காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் முந்​தி​யிருக்​கிறார். தட்​டாஞ்​சாவடி​யில் முதல்​வர் ரங்​க​சாமியை எதிர்த்து அவர் போட்​டி​யிடு​கிறார்.

இண்​டியா கூட்​ட​ணி​யில், திமுக – காங்​கிரஸ் இடையே மோதல் நில​வும் சூழலில், திமுக வேட்​பாளர்​கள் நிற்​கும் 5 தொகு​தி​களில் போட்டி வேட்​பாளர்​ களாக களமிறங்​கும் காங்​கிரஸ்​காரர்​ களுக்​கெல்​லாம் ஏ, பி பார்​மில் கையெழுத்​திட்டு வழங்​கிய வைத்​திலிங்​கம், நாராயண​சாமி​யின் வேட்பு மனு​வில் கடைசி வரை கையெழுத்​தி​டா​மலேயே இழுத்​தடித்​தார். இதைக் கண்​டித்து நாராயண​சாமி ஆதர​வாளர்​கள் வைத்​திலிங்​கம் வீட்​டின் முன்​பு, கட்சி அலு​வல​கத்​தின் முன்பு போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர்.

ஆனால், “நா​ராயண​சாமியை புறக்​கணிக்​க​வில்​லை. நான் தட்​டாஞ்​சாவடி​யில் வென்​றால், மக்​களவை உறுப்​பினர் பதவியை துறப்​பேன். அப்​போது அந்த இடைத் தேர்​தலில் நாராயண​சாமியை நிறுத்​து​வோம். நன்கு பேசக் கூடிய ஒரு நபர் நாடாளு​மன்​றத்​துக்கு வர வேண்​டும் என்று கட்​சித் தலைமை நினைக்​கிறது. இது தவறா?” என்று விளக்​கம் கொடுத்​திரு​கிறார் வைத்​திலிங்கம்.

எனினும், நாராயண​சாமி தற்​போது முடங்​கிப் போயிருக்​கிறார் என்​பதே உண்​மை. தேர்​தல் களத்தில் அவரை பார்க்க முடிவதில்​லை. பிரச்​சா​ரத்​துக்​கும் வரவில்​லை. இதுபற்றி காங்​கிரஸ் வட்​டாரங்​களில் விசா​ரித்த போது, "வைத்​திலிங்​கம் தொடக்​கம் முதலே முதல்​வர் பதவியை குறி வைத்து செய​லாற்​றுகிறார். காங்​கிரஸ் வென்​றால், தனக்கு போட்​டி​யாக நாராயண​சாமி வந்து விடக்​கூ​டாது என்​ப​தில் தெளி​வாக இருக்​கிறார்.

கட்​சித் தலை​மைக்கு சிலர் அனுப்​பிய கடிதத்​தில், இந்த முறை நாராயண​சாமி பிரச்​சா​ரம் செய்​தால் காங்​கிரஸுக்கு பாதிப்பு ஏற்​படும் என்று குறிப்​பிட்​டுள்​ளனர். மேலிட உத்​தர​வுப்​படி நாராயண​சாமி செயல்​படு​வ​தால் பிரச்​சா​ரத்​துக்கு வரவில்​லை’’ என்று தெரிவிக்​கின்​றனர்.

கடந்த சில தினங்​களுக்கு முன்பு தேர்​தல் பணி​யைப் பார்​வை​யிட புதுச்சேரி வந்த கர்​நாடக காங்​கிரஸ் அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் செய்​தி​யாளர்​கள் இதுபற்றி கேட்​டதற்​கு, “நா​ராயண​சாமிக்கு தேர்​தல் ஒருங்​கிணைப்​பாளர் பொறுப்பு தரப்​பட்டுள்​ளது. அப்​பணியை அவர் செய்​கிறார்” என்று குறிப்​பிட்​டார். ஒரு​வேளை குண்​டு​ராவ் குறிப்​பிடு​வது போல் அவர் அந்​தப் பணி​யைச் செய்​யக் கூடும்.

SCROLL FOR NEXT