தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸை திமுக இன்று அழைத்துள்ள நிலையில், தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த தயாராவதாக வரும் செய்திகளால் திமுக கூட்டணிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்கள் மட்டுமன்றி, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்டு திமுக-வுக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது.
இதனால் தேவையற்ற சச்சரவுகள் வளர்வதை தவிர்ப்பதற்காக இந்த விஷயத்தில் சோனியா காந்தி நேரடியாகத் தலையிட்டார். இதையடுத்து அவரது அறிவுறுத்தல்படி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இந்தச் சூழலில்தான், ராகுலின் உள்வட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் குழு ஒன்று, தவெக-வின் முக்கியப் புள்ளிகளை நள்ளிரவில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள்.
இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், "முதல்வருடனான சந்திப்பில் வேணுகோபால் 39 தொகுதிகள், 2 ராஜ்ய சபா இடங்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு திமுக உடன்படவில்லை. அதேசமயம், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சுகள் குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் முதல்வர்.
இதனிடையே, கனிமொழியும் கிரிஷ் சோடங்கரும் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போதும், வேணுகோபாலின் கருத்தையே சோடங்கரும் முன்வைத்திருக்கிறார்.
ஆனால், ‘புதிதாக வரும் கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டி இருப்பதால் கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய 25 தொகுதிகளை ஒதுக்கத் தயாராய் இருக்கிறோம்’ என கனிமொழி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தலைமைக்கு தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு சோடங்கர் புறப்பட்டிருக்கிறார்.
பிறகு அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘நாங்கள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டவர்கள். அதிகாரத்திற்கு ஆசைப்படாமல் இருக்க நாங்கள் ஒன்றும் என்ஜிஓ நடத்தவில்லை; அரசியல் கட்சி நடத்துகிறோம். எங்களின் பலம் தெரிந்ததால் தான் விஜய் கட்சியிடம் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறது’ என்றார்.
25 தொகுதிகள் தான் என்ற திமுக-வின் பிடிவாதம் காங்கிரஸ் மேலிடத்தை மாற்றி யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்தே தவெக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இசைவு கொடுத்திருக்கிறார்கள். இதற்காக வந்த காங்கிரஸ் சிறப்புக் குழு, தவெக புள்ளிகளை சந்தித்துப் பேசியிருக்கிறது. அந்தக் குழு தான் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கான தேர்தல் வியூகங்களை வகுக்கிறது.
அக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு தவெக புள்ளிகளைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் சில முக்கியத் தரவுகளை முன்வைத்துள்ளனர். 'எஸ்ஐஆரில் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது திமுக-வை உதறல் எடுக்க வைத்துள்ளது. இம்முறை களம் விஜய்க்குத்தான் சாதகமாக இருக்கிறது. எங்களிடம் சுமார் 30 சதவீத வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்' என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது.
தவெக-வுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை விவரம் திமுக-வுக்கு எட்டியதை அடுத்தே அவசர அவசரமாக இன்று காங்கிரஸை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. இன்றைய கூட்டத்தில் தங்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடந்தால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கும். இல்லாவிட்டால் பனையூர் பக்கம் பகிரங்கமாகவே பார்வையைத் திருப்பிவிடும்" என்றனர்.