சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

“தவறு செய்தவர்களை நீக்கும் துணிவில்லாத முதல்வர் விஜய் தூய சக்தியா?” - சீமான்

என்.மாதவன்

திருச்சி: “தவறு செய்த தவெக எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு கூட துணிவில்லாத முதல்வர் விஜய், தன்னை எப்படி தூய சக்தி என கூறுவார்?” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சிவகுமார் தொடர்ச்சியாக கூறி வருகிறார். மேகேதாட்டு அணை கட்டுவோம், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டேன் என கூறும் காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

உரிமையை பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தில் எதை அவர்களால் காப்பாற்ற முடியும்? மேகேதாட்டு விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால் நான் இதற்கு என்ன பதில் கூறுவேன். நான் ஜீரோ, ஹீரோ என கூறுபவரிடம் இதை கேளுங்கள்.

முதல்வர் எதையும் பேச மாட்டார், ஆனால் செயலில் காட்டுவார் எனக் கூறுகிறார்கள் அவர் காட்டிய செயல் ஏதாவது ஒன்றைக் கூற முடியுமா ? சிறுமி காணாமல் போன விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறும் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.

புகார் மனு அளிக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். அந்த பொறுப்புக்கு தகுந்தது போல் அவர் செயல்படவில்லை அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு கூட முதல்வருக்கு துணிவில்லை. அவர் எப்படி தூய சக்தி என கூறுவார்.

பல பேரை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரால் எம்எல்ஏ அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்ய முடியாதா? அவரை தகுதி நீக்கம் செய்து அந்த தொகுதியில் தேர்தல் வைத்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எப்படி தலைவர்? மாஸ் லீடர்?

மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும். வென்றால் தான் நாங்கள் களத்தில் இருப்போம், தோல்வி அடைந்தால் ஓடி விடுவோம் என இருப்பது நியாயமா ? தோல்வி அடைந்தாலும் களத்தில் இருப்பவன் தான் வீரன். பெரும்பான்மை முக்கியமல்ல. உண்மையும், நேர்மையும் தான் முக்கியம். எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT