தமிழகம்

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடைக்கு வந்த பெரியாறு அணை நீர் - வேளாண் பணிகள் மும்முரம்

என்.கணேஷ்ராஜ்

தேனி: முதல் போகத்துக்காக பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதிகளை வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உழுதல், நாற்றுப்பாவுதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை இரண்டு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. பெரியாறு அணையில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் முதல்போகத்துக்கு 68நாள் தாமதமாக கடந்த 8-ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

இந்நீர் கடைமடை வரை செல்லும் வகையில் 17 பிரதான கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து வாய்க்கால், கிளை வாய்க்கால் வழியே இந்த நீர் ஒவ்வொரு பகுதி வயல்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த நீர் கம்பம் பள்ளத்தாக்கின் கடைசி பகுதியான பழனிசெட்டிபட்டி வயல்களுக்கு வந்தடைந்துள்ளது. தண்ணீர் தொட்டி எதிர்புறத்தில் கம்பம் பள்ளத்தாக்கின் கடைசி கால்வாய் அமைந்துள்ளது. இதில் இருந்து பிரிந்து செல்லும் நீர் பல வயல்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் இப்பகுதிகளில் உழவு, நாற்றுபாவுதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “தாமதமான நீர் திறப்பினால் முதல்போக அறுவடையின் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாம் போகத்திலும் சிரமம் ஏற்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT