சென்னை: மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழக சட்டப்பேரவை விதி 220-ன் கீழ் அதிமுக சார்பாக ஒரு உரிமை பிரச்சினையை அவைக்கு கொண்டுவர அனுமதி கேட்டோம். மேகேதாட்டு தனித் தீர்மானத்தில் இடைச்செருகல் திருத்தம் செய்ததை அவை கவனத்துக்கு கொண்டுவருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தோம். சபாநாயகர் ஜீரோ ஹவரில் இதுபற்றி பேச அனுமதிக்காத காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
மேகேதாட்டு விவகாரத்தில் ஜூன் 18 அன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டும் அதிமுக சார்பில் ஆதரித்தோம். ஜூன் 19ஆம் தேதி சட்டப்பேரவை விதி 104ன் படி முன்மொழியப் படாத, இடைச்செருகல் சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பேரவை விதி 104-ன் கீழ் உறுப்பினர்களுக்கு அனுப்பிய வரைவு தீர்மானத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால், அரசின் சார்பான திருத்தங்கள் முறையாக அவைக்கு தெரிவிக்கப்பட்டு வரைவில் உள்ள தீர்மானத்துக்கு பதிலாக திருத்தப்பட்ட தனித் தீர்மானத்தை மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெற்று, திருத்தப்பட்ட தீர்மானத்தை பேரவையில் முன்மொழிய வேண்டும். இதனையே சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினையாகக் கொண்டு வந்தோம்.
விதிகளுக்கு புறம்பாக திருத்தத்தை முதல்வரின் பதில் உரையில் சேர்த்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தனித் தீர்மானம் ஜூன் 18ல் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. பிறகு முதல்வரின் பதிலுரையில் இந்த இடைச்செருகல் திருத்தத்தை சேர்த்துள்ளார்கள். எனவே, விதிகளின் படி அவர்கள் இந்த தீர்மானத்தை கொண்டுவரவில்லை என்பதை தெரிவிக்கவே நாங்கள் இந்த உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவந்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்பதால் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
காவிரி நதி நீர் என்பது தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஏற்கெனவே நடுவர் மன்றம் ஒரு நிலையான தீர்ப்பை வழங்கி விட்டது. அப்படி இருக்கையில் மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என எந்த நோக்கத்துக்காக கேட்கிறார்கள். 15 ஆண்டுகள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளது.
கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேல் படுகை மாநிலம் காவிரி நீரை தடுக்கவோ, தேக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டனர். அப்படியிருக்கையில் மீண்டும் நடுவர் மன்றம் கேட்கும் தீர்மானத்தை ஏன் கொண்டுவந்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்” என்றார்.