சென்னை: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் நிலையிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் மணிவாசன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உளவுத் துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி, சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, உளவுத் துறை தலைமை அதிகாரியாக அஸ்ரா கார்க் செயல்பட உள்ளார்.
மேலும், முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக ஜி.தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக, வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றினார். இதேபோல, தென் சென்னை காவல் இணை ஆணையர் பாகெர்லா சிபாஸ் கல்யாண் உளவுத் துறை (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜியாகவும், திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன், உளவுத் துறை (சிஐடி) டிஐஜியாகவும், திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கருண் உத்தவ் ராவ், ஒருங்கிணைந்த குற்ற உளவுப் பிரிவு எஸ்.பி.யாகவும், தென்காசி மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன், எஸ்பிசிஐடி (1) எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி எஸ்.பி. மதன், எஸ்பிசிஐடி (1) எஸ்.பி.யாகவும், க்யூ பிரிவு சிஐடி எஸ்.பி. சண்முகம், எஸ்பிசிஐடி (2) எஸ்.பி.யாகவும், சென்னை மெட்ரோ மண்டல க்ரைம் பிரிவு சிஐடி ஜி.எஸ்.மாதவன், எஸ்பிசிஐடி (2) எஸ்.பி.யாகவும், மாநில சட்டம் - ஒழுங்கு உதவி ஐ.ஜி. சிலம்பரசன், சிறப்பு டிவிஷன் எஸ்பிசிஐடி பிரிவு எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) தலைமை ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த டிஜிபி ராஜீவ்குமார், சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி. செந்தில்வேலன், ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியக கூடுதல் இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.