முதல்வர் ஸ்டாலின்
மதுரை: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 36,660 கோடி முதலீட்டை ஈர்க்க 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முன்னதாக இன்று காலை ‘தமிழ்நாடு வளர்கிறது’ எனும் தலைப்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் வாயிலாக ரூ.36,660 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 56,766 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய மேம்பாலம் திறப்பு: மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் உட்பட மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பில், 7 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.150.28 கோடி செலவில், மேலமடை சந்திப்பில் 950 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்ைத திறந்து வைக்கிறார்.
இந்த மேம்பாலத்துக்கு ‘சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.2630.88 கோடி மதிப்பில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, உத்தங்குடியில் நடைபெறும் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 63,698 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் 77,351 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். 2021-ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், ரூ.8,668 கோடியில் 96,55,916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம்ரூ.27,463 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.