சென்னை: ஜெம் வீரமணி வழக்கு விவகாரத்தில் மேலும், 2 பெண் அதிகாரிகளிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலதிபர் வீரமணி, உதவியாளர் சாந்தி, கணவர் மகேந்திர சிம்மன், முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் கார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளைக் குறி வைத்து வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வீரமணி மீது 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வீரமணியின் பாலியல் அத்துமீறல்களை ரகசியமாக படம் பிடித்த சாந்தி, அதை வைத்து அவரை மிரட்டி பணம் பறித்ததாகவும், இதன் பின்புலத்தில் பணம் பறிக்கும் கும்பல் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும், ஜெம் வீரமணி வழக்கைக் கையாள்வதில் ஏற்பட்ட தாமதம், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்டவை குறித்து முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண், முன்னாள் கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் 3 மணி நேரம் விசாரித்தனர்.
இதேபோல், புகார் அளிக்கப்பட்ட காலத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையராக இருந்த ராதிகா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த வனிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
புகார் காலத்தில் ராதிகா நீண்ட விடுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை வரும் 27-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.