சென்னை: ஸ்ரீராமச்சந்திரா நிறுவனத்தில் 3 நாள் சர்வதேச செவித்திறன் மாநாட்டை சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவித்திறன் நலன் ஆய்வாளர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை உள்ளடக்கிய உலகளாவிய செவித்திறன் நலக்கூட்டமைப்பின் 16-வது சர்வதேச மாநாடு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் இந்த மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டை தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது துவக்கி வைத்தார்.
இதில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 27 நாடுகளிலிருந்து 250 மருத்துவர்கள் பங்கேற்றனர். இவர்களோடு பேச்சு, மொழி மற்றும் கேட்பியல் துறை நிபுணர்கள், காது கேளாதோருக்கான வழிகாட்டிகள், சிறப்பு கல்வியாளர்கள், பயிற்சி பெற்ற பெற்றோர்கள் மற்றும் சமூக பணியாளர்கள் பலரும் பங்கேற்று, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் செவித்திறன் நலனை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். மேலும், பாதிக்கப்பட்டோரின் நேரடி அனுபவப் பகிர்வு, ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு மற்றும் மறுவாழ்வு முறைகளுக்கான சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மாநாட்டில் சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது பேசியதாவது: உலகளவில் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிலான செவித்திறன் குறைபாட்டுக்கு, 43 கோடிக்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படுகிறது. இளைஞர்கள் இயர்போன்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும், தொழிலாளர்கள் அதிக சத்தமுள்ள இடங்களில் தொடர்ந்து பணிபுரிவதாலும் செவித்திறனை இழக்கின்றனர். தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார வசதியில்லாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுவரை 4000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இலவசமாக செவிப்பொறிகளும் வழங்கப்படுகின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தொழிற்துறையினரும், ஆய்வாளர்களும் இணைந்து அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் செவித்திறன் பராமரிப்பு உபகரணங்களை தயாரிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் காது மற்றும் செவித்திறன் பராமரிப்புப் பிரிவு தொழில்நுட்பத் தலைவர் ஷெல்லி சத்தா, “காது மற்றும் செவித்திறன் தொடர்பான பிரச்சினைகளை சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் உதவியுடன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் உலகளாவிய செவித்திறன் நலக்கூட்டமைப்பின் இயக்குநர்கள் ஜேம்ஸ் சாண்டர்ஸ், டேவிட் மோல்டர், ராமச்சந்திரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளையின் அறங்காவலர் சம்புத்தா வெங்கடாசலம், இணை துணைவேந்தர் மகேஷ் வக்கமுடி, கேட்பியல் மற்றும் பேச்சு மொழித்துறை முதல்வர் பிரகாஷ் பூமிநாதன், மாநாட்டின் அமைப்புச் செயலர் பேராசிரியர் வித்யா ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.