சென்னையில் சட்டப்பேரவைத் தேர்தல் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக சர்வதேச அளவிலான பார்வையாளர்கள் வந்துள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர்களுக்கு, வாக்குப்பதிவு நடத்தும் முறை மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் போன்றவற்றை விளக்கி கூறிய அதிகாரிகள். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளைக் கொண்ட சர்வதேசக் குழு சென்னையில் நேற்று பார்வையிட்டது.
தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம், புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் இந்தத் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் 2-ம் கட்டத்தில் சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனத்தின் ஒரு பிரதிநிதி மற்றும் டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 34 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்களில் பூட்டான், எகிப்து, மொரீஷியஸ், மால்டோவா, இந்தோனேசியா, இலங்கை, கானா, நமீபியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் நேற்று சென்னை வந்தனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி தொகுதியில் என்கேடி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அதன் பயன்பாடு, நம்பகத்தன்மை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கதவைத் திறந்து, இயந்திரங்களை எடுத்து, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள், அதனுடன் வழங்கப்படும் அழியாத அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி பயிற்சிஉள்ளிட்டவற்றையும் பார்வை யிட்டனர்.
இன்று வாக்குப்பதிவை பார்வையிடல் பின்னர், தேர்தல் பணியில் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் நிர்வாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்டக் கட்டுப்பாடு அறைகள் மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையங்கள் உள்ளிட்ட பிற வசதிகளைப் பார்வையிட்டனர். சென்னையில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவையும் பார்வையிடுகின்றனர்.