சென்னை: “6 எம்எல்ஏக்கள் இதுவரை பதவி விலகி இருக்கிறார்கள் என்றால், இது அதிமுகவுக்குள் நிலவும் மிக முக்கியமான பிரச்சினை. அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி முரண்கள் என்ன என்பதையே வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக அரசுக்கு ஆதரவு நல்கும் அத்தனை கட்சிகளும் வாக்கு மாற வாய்ப்பு இல்லை. விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றும். எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக காங்கிரஸ் கட்சி ஆதரவு மட்டும் கொடுக்காமல், கூட்டணியிலும் இணைகிறோம் என்று அறிவித்து உறவை உறுதிப்படுத்தினார்கள்.
5 ஆண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர். அதே நிலைப்பாட்டை விசிகவும் கொண்டுள்ளது. எனவே இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இயங்கும் என நான் நம்புகிறேன்.
தவெக சார்பில் கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு எங்களை அழைத்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர் பங்கேற்கிறோம்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஏன் ராஜினாமா செய்கிறார்கள், என அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், யூகங்களின் அடிப்படையில் இங்கு விவாதங்கள் நடக்கின்றன. அதிமுகவுக்குள் என்ன பிரச்சினை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி முரண்கள் என்ன என்பதையே வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லாமல், யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசை வழிப் போக்கையே மாற்றும் வேலையையே செய்துகொண்டிருக்கிறார்.
6 எம்எல்ஏக்கள் இதுவரை பதவி விலகி இருக்கிறார்கள் என்றால், இது அதிமுகவுக்குள் நிலவும் மிக முக்கியமான பிரச்சினை. இதனை தீவிரமாக விவாதிக்க வேண்டும். இதுகுறித்து அதிமுகவினரிடம்தான் கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.