புதுடெல்லி: தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வழக்கறிஞர் சவுகத் அலி முகமது தொடர்ந்த வழக்கில், ‘‘திருத்தப்பட்ட புதிய வக்பு வாரிய சட்டப்பிரிவு 14-ன்படி மொத்த உறுப்பினர்களில் இருவர் முஸ்லிம் அல்லாதவர்கள், பார் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் எனக்குழுவில் இடம்பெற வேண்டும். ஆனால் இதைப் பின்பற்றித் தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை என்பதால் அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரப் பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு கடந்த ஜன.8-ம் தேதி விசாரித்து, தமிழ்நாடு வக்பு வாரியம் தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நிறுத்தி வைத்தும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தும் விசாரணையைத் தள்ளிவைத்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், ‘‘வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, தமிழ்நாடு வக்பு வாரிய செயல்பாட்டுக்கு உயர்நீதிமன்ற விதித்த தடையில்தவறு உள்ளது. வாரியங்களில்உறுப்பினர்கள் பதவிகள் படிப் படியாக நியமிக்கப்படுவதை யும், காலியாக உள்ளதால் வாரியத்தைச் செயல்படத் தடை விதித்ததும் தீர்ப்புகளுக்கு எதிரானது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்குப்பிறகு எஞ்சியுள்ள உறுப்பினர்களை நியமிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வாரியம் செயல்பட இடைக்காலத் தடைவிதித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘வாரியத்தின் 11 உறுப்பினர்களில் 8 பேர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
இதைக் காரணமாகக் கொண்டு வாரியம் செயல்படத் தடை விதிக்க முடியாது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது’’ என்று வாதிட்டார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீடு மனுவுக்குப் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், சவுகத் அலி முகமதுவுக்கும் உத்தரவிட்டது.
மேலும், ‘‘தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது புதிய உறுப்பினர்களின் நியமனம் குறித்த முன்மொழிவை தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டது.