கோப்புப்படம்

 
தமிழகம்

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எண்ணூரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (நவ. 11) முதல் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் வினீத் குமார் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மின் பற்றாக்குறை ஏற்பட்டு அறிவிக்கப்படாத மின் தடைக்கு வழிவகுக்கும். மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்படும்.

அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களின் பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து அதன் மூலமாக தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது.

இந்த வேலைநிறுத்தத்துக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. எனவே இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அமர்வு விசாரித்தது. இதில் வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT