தமிழக அமைச்சர் மரிய வில்சன் | கோப்புப் படம்
புதுச்சேரி: தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.25ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ் பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் சேரலாதன், புதுச்சேரி பிராந்தியமான மாஹே மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மேஜிஸ்திரேட் ஆக மாற்றப்பட்டார். இதனால் ஜேஎம் 1 நீதிமன்ற வழக்கை ஜேஎம் 2 நீதிபதி சந்திரசேகர் விசாரித்து வருகிறார். இவர், இவ்வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை ஜேஎம் 2 நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜேஎம் 1 நீதிமன்றமானது மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும். வேறு நீதிமன்றங்களில் நடத்த முடியாது அதனால் இங்கு நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த செப்.11ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், வழக்கை செப்.18 (இன்று ) வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஆனந்த் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, அமைச்சரின் சகோதரர் மரிய குளோத் தரப்பு வழக்கறிஞர் பிரவீண், இடைக்காலத் தடை உத்தரவின் சாராம்சம் தெரிய வேண்டும் என்பதால் மனு நகல் கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டார்.