தமிழகம்

சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடும் நிலையில், வரும் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வமும் இன்று தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வரும் சூழலில், தற்போதைய அரசு அடுத்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். புதிதாக அமையும் அரசே முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அந்த வகையில், தற்போதைய திமுக அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

          

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.20-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலினின் பதில் உரையுடன் முடிந்தது. அத்துடன், மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான அறிவிப்பை பேரவைத் தலைவர் அப்பாவு கடந்த பிப்.8-ம் தேதி வெளியிட்டார். அதன்படி, சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதன்பிறகு, அலுவல் ஆய்வுக் குழு கூடி, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

இடைக்கால பட்ஜெட் என்றாலும், தேர்தலை எதிர்நோக்கியது என்பதால் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT