சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை குறி வைத்து கைது செய்துபோலீஸார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு 17 வழக்குகளில் வரும் மார்ச் வரை 12 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் பதிவு செய்த வழக்குகளில் போலீஸார் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் எனது மகன் சவுக்கு சங்கர் தமிழக அரசின் செயல்பாடுகளையும், முறைகேடுகளையும் விமர்சித்து வருவதால் பழிவாங்கும் விதமாக ஒன்றன் பின் ஒன்றாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
அரசின் காழ்ப்புணர்ச்சியால், போலீஸார் உள்நோக்கத்துடன் பொய் வழக்குகளைஜோடித்து தனிமை சிறையில்அடைத்துள்ளனர். எனது மகனுக்கு இருதய நோயும், நீரழிவு நோயும் உள்ளது. தொடர்சிகிச்சைகளுக்காக ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் அடங்கிய விடுமுறை காலஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மு.ராமமூர்த்தி, “பழிவாங்கும் நோக்கில் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். கடந்த டிச.12-ம் தேதி மாலை திடீரென ஒரு தொகையை சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரியும் நபருக்கு ஜிபே மூலமாக அனுப்பிவிட்டு, டிச.12-ம் தேதி எப்ஐஆர் போட்டு, 13-ம் தேதி யாரையோ மிரட்டியதாகக் கூறி கைது செய்துள்ளனர். அவருக்கு சிறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை" என வாதிட்டார்.
இதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசை விமர்சிக்கிறார் என்பதற்காக ஒரு நபரை குறிவைத்து தொடர்ந்து கைது செய்து போலீஸார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவரை அடுத்தடுத்து கைது செய்ய வேண்டுமென்கிற போலீஸாரின் ஆர்வம் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
காவல்துறையின் இதுபோன்ற செய்கையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன்மூலம் கருத்து சுதந்திரம் மட்டுமின்றி தனிமனித சுதந்திரமும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து ஒருபோதும் தடம் மாறக்கூடாது. எனவே,சவுக்கு சங்கரின் உடல்நிலை மற்றும் மருத்துவக்காரணங்களை கருத்தில் கொண்டு அவர் மீது தற்போது பதியப்பட்டள்ள 2 வழக்குகள் உள்பட சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என பல்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ள 17 குற்ற வழக்குகளில் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை 12 வாரங்களுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ரூ. 1 லட்சத்தை பிணைத்தொகையாக செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கில் ஜாமீன்: யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீனில் வந்தார். மீண்டும் தன்னை இழிவாக பேசியதாக திருச்சியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற காவலர் புகார் செய்தார். அதன்பேரிலான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்குசங்கரை போலீஸார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனுஸ்ருதி, சவுக்கு சங்கரின் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.