சென்னை: புறநகர் மின்சார ரயில் பகுதிகளில் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில், 24 மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தேர்தல் கண்காணிப்பு சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி, கடந்த 3 வாரங்களில் ரூ.1.60 கோடி தங்கக்கட்டிகள், ரூ.11.66 கோடி வெள்ளி கட்டிகள், ரூ.1.50 கோடி பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், புறநகர் மின்சார ரயில்களில் தேர்தலுக்கான பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் புறநகர் மின்சார ரயில் வளாகப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ரயில்களின் வருகை, பயணிகள் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தோ வெளியூர்களிலிருந்து வரும் புறநகர் மின்சார ரயில்கள் மூலமோ தேர்தலுக்கான பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.
அதற்காக 4 பேர்கொண்ட 2 சிறப்பு கண்காணிப் புக்குழுவையும் அமைத்துள்ளோம். அந்தக் குழுவினர் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி சந்தேக பயணிகள் குறித்து தகவல் தெரிவிப்பர்.
அந்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட பயணிகளை சோதனையிட்டு வருகிறோம். கடந்த 2 நாட்களில் தினசரி 220 புறநகர் மின்சார ரயில் சேவைகளை கண்காணித்து வருகிறோம். இதுபோல, எழும்பூர் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.