கோப்புப் படம்

 
தமிழகம்

திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சித் துறையுடன் தூய்மை இயக்கம் இணைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் க்ளீன் தமிழ்நாடு நிறுவனம், தூய்மை இயக்கம் ஆகியவை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்காக, 2013-ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ரூ.10 கோடி தொடக்க நிதியுடன் க்ளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

அதன்பின் திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை இயக்கம் என்ற மாநில அளவிலான புதிய இயக்கம் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. அதனுடன் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கிய சிடிசிஎல் நிறுவனமும் இணைக்கப்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக 3 ஆண்டுகளுக்கான முன்னோடித் திட்டமாக கும்பகோணம் மாநகராட்சியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.4.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2026-29-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு சென்னை மாநகராட்சி மண்டலம் 9, ராமேசுவரம் நகராட்சி, கருங்குழி பேரூராட்சி மற்றும் திருத்தணி வட்டாரம் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12.53 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

தற்போது சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் க்ளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட், தூய்மை இயக்கம் ஆகியவை ஒட்டுமொத்தமாக ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT