புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மருந்துகளை கணக்கிடும் அதிகாரிகள். | படம்: சாம்ராஜ் |
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த கிடங்குகளில் 2-வது நாளாக நேற்று ஆய்வு மற்றும் மருந்துகளைக் கணக்கிடும் பணி நடைபெற்றது.
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதாக சிபிசிஐடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்த சீர்காழி ராணா, காரைக்குடி மெய்யப்பன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்ததும், ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவானதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் 4 கிடங்களுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டன. மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் அங்கிருந்த மருந்துகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இரண்டாம் நாளாக நேற்றும் ஆய்வு மற்றும் மருந்து, மாத்திரைகள் கணக்கிடும் பணி நடைபெற்றது.
வெளிமாநில போலீஸார்... இந்நிலையில், நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கைதானவர்களிடம் விசாரிக்க டெல்லி, ஆந்திர மாநிலத்தில் இருந்து போலீஸார் புதுச்சேரி வந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தரப்பில் கூறியதாவது: பிரபல நிறுவனம் தயாரிக்கும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய், நரம்பியல் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் புதுச்சேரியில் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள தொழில்சாலையில் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் உள்ளன. சீல் வைக்கப்பட்ட 4 கிடங்குகளில் கோடிக்கணக்கான மதிப்பிலான மாத்திரைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலை 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. நாடு முழுவதும் பல நூறு கோடிகளுக்கு மேல் போலி மருந்துகளை விற்றுள்ளது. இங்குதயாரிக்கப்பட்ட மருந்துகள் இன்னும் 6 கிடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம்.
அவை குரும்பாபேட் பகுதியில் உள்ளன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கிடங்குகளிலும் ஆய்வும், கணக்கெடுப்பும் நடைபெறும். இந்த மருந்துகளால் பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.