சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை மூடி மறைக்க காவல்துறை உயர் அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து விரிவாக விசாரணை நடந்து வருவதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் ஒரு வழக்கில் வீரமணி கைது செய்யப்பட்டார்.
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கை போலீஸார் சரியாக புலன் விசாரணை செய்யாமல் மூடி மறைக்க முயற்சித்ததாகவும் இதனால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும் வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகி தன்னிடமிருந்த ஆதாரங்களை சமர்ப்பித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை மூடி மறைத்ததில் காவல்துறை உயர் அதிகாரிகளின் பங்களிப்பு என்ன என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை போலீஸாரும், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மாவும் சிறப்பான முறையில் விசாரித்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணைக்கு அவசிய மில்லை எனக் கூறி வழக்கை அக்.26-க்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் பாலியல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய தலைமைக் காலர்கள் மலர்விழி, ராஜ்குமார், ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் அடைப்பு
மேலும், வீரமணியால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தற்போது புகார் தெரிவித்துள்ளார். இதன்படி மேலும் ஒரு போக்சோ வழக்கில், வீரமணி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் சிறை யில் இருந்து போலீஸ் பாதுகாப் புடன் போக்சோ சிறப்பு நீதிமன்றத் துக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். அவரை நீதிபதி எஸ்.பத்மா, அக். 21 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வீரமணி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் வீரமணியின் பாலியல் குற்றச் செயல்களை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் குறித்து மற்றொரு பிரிவினர் துப்புதுலக்கி வருகின்றனர். கோடிக்கணக்கான பணம் கைமாறியதாகவும் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் தொடர்புடைய சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் குறித்தும் போலீஸார் தகவல் திரட்டி வருகின்றனர்.