கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

 
தமிழகம்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: காகர்லா உஷா ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது அரசு

வெற்றி மயிலோன்

சென்னை: பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி.அருள் விக்னேஷ் மீது, ஒரு பெண் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை விசாரிப்பதற்காக, பின்வரும் அதிகாரிகளைக் கொண்ட ‘உள் புகார் குழு’ (Internal Complaints Committee) ஒன்றை அரசு அமைக்கிறது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறை செயலாளர் பி. சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு, இந்தப் புகார் குறித்த விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 'பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013' (மத்தியச் சட்டம் 14/2013)-ன் விதிகளின்படி, புகாரின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையின் 18.06.2025 தேதியிட்ட அரசு ஆணை எண் 64-ல் குறிப்பிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி தகவல்:

இதனிடையே, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் கடந்த 23-ம் தேதிதான் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணையைத் திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங்கும், விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாகப் பிரிவு ஐஜி காமினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்படும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது எடுக்கப்படும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT