சென்னை: கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை யில் கூறியிருப்பதாவது: நமது வரலாற்றில் சிறப்புமிக்க ஆன்மிகக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ளும்.
வெளிப்படைத் தன்மை
கோயில் சொத்துகள், நிலங்கள் மற்றும் அறக்கட்டளை வருவாய்கள் அனைத்தையும் முழுமையாகத் தணிக்கை செய்வதற்கும், கணக்குகளை வெளிப்படையாகவும், கணினிமயமாகவும் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முந்தைய காலங்களில் நிலவிவந்த நிர்வாக முறைகேடுகள் முற்றிலும் களையப்பட்டு, கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இருமொழிக் கொள்கை
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடை பிடிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறியிருப்ப தாவது: கடந்த 1968-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, ‘மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருமொழிக் கொள்கை என்பது தமிழக மக்களால் ஏற்றுக்கொள் ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலை யில், அதையே இந்த அரசும் கடைபிடிக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழை வழக்காடும் மொழியாகப் பயன்படுத்தவும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலி யுறுத்தும்.
தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால்தான் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்எஸ்ஏ) திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரூ.3,458 கோடி நிதியை விடுவிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்கக்கூடியது அல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் திணிப்பதற்கு சமம்.
கல்வி நிதியை வழங்க வேண்டும்
மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கப்படும் என்ற நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, தமிழகத்துக்குரிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.