கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சாலை பராமரிப்பு குறைபாடு தொடர்பான புகாரில் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட சாலைகள் மோசமாக இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களையும் மேற்கோள்காட்டி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ராஜா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. பின்னர் பிறப்பித்த உத்தரவில் புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், ரூ.15 ஆயிரம் வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டபோதிலும், சாலையை பராமரிக்கவில்லை. எனவே வாகன ஓட்டிகள் சந்திக்கும் மனஉளைச்சலைக் கருத்தில் கொண்டு, பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ஆணையம், அந்தத் தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதியத்துக்குச் செலுத்தவும் உத்தரவிட்டது.