புதுப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற கூடுதல் வளாகம்.

 
தமிழகம்

ரூ.23 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட இந்தோ-சாராசனிக் கட்டிடம்: உயர் நீதிமன்ற கூடுதல் வளாகமாக செயல்பட தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: சுமார் 135 ஆண்டுகால பாரம் பரியமிக்க பழைய இந்தோ- சாராசனிக் சட்டக்கல்லூரி வளாகம் ரூ. 23 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வளாகமாக நேற்றுமுதல் செயல்படத் தொடங்கியது.

சென்னை பாரிமுனை பகுதியில் இயங்கி வரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் ‘மெட்ராஸ் லா காலேஜ்’ என 1891-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டக் கல்லூரி, பின்னாளில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது.

          

இந்த சட்டக்கல்லூரி நிர்வாக காரணங்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டக்கல்லூரி இயங்கி வந்த சுமார் 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க இந்தோ - சாராசனிக் கட்டிடம், ரூ.23 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த வளாகம், தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த ஆண்டு அக்டோபரில் திறக்கப்பட்டது. எழில்மிகு தோற்றத்துடன் விசாலாமான நீதிமன்ற அறைகளுடன் அமைந்துள்ள இந்த கூடுதல் வளாகத்தில் நேற்று முதல் 6 நீதிமன்றங்கள் தனது அன்றாட நீதிபரிபாலன பணிகளை தொடங்கியுள்ளன.

இந்த நீதிமன்றங்களுக்கு பழைய வழக்கப்படி ‘ரோமன் நம்பர்களில்’ எண்கள் பெயரிடப்பட்டுள்ளன. புதிய வளாகத்தில் முதல் நாளான நேற்று தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு முதல் நீதிமன்றத்திலும், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இரண்டாவது நீதிமன்றத்திலும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மூன்றாவது நீதிமன்றத்திலும், நீதிபதி டி.வினோத்குமார் நான்காவது நீதிமன்றத்திலும், நீதிபதி கே.குமரேஷ் பாபு ஐந்தாவது நீதிமன்றத்திலும், நீதிபதி ஆர்.சக்தி வேல் ஆறாவது நீதிமன்றத்திலும் அமர்ந்து உரிமையியல், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகளின் இறுதி விசாரணைகளை மேற்கொண்டனர்.

இங்கு செயல்பட்ட பழைய மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற இந்நாள் மூத்த வழக்கறிஞர்கள் பலர், சீரமைக்கப்பட்ட வளாகத்தை பார்வையிட்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பல வழக்கறிஞர்கள் செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT