அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: பெரியார் அறிவுலக நூலக விவகாரத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட தரமற்ற நூல்களைக் கொள்முதல் செய்ததன் மூலம், திமுக அரசு இந்தியாவின் முதல் ‘ஏஐ ஊழலை’ செய்துள்ளது’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், திமுக ஆட்சிக் காலத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வெளியிட்டு கூறியதாவது: கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்கு ‘அகல்விளக்கு’ பதிப்பகத்திடம் இருந்து ஆட்சேபனைக்குரிய, தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்களை வாங்குவதற்கு திமுக ஆட்சியில் பிப்.14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நூல்களை வெறும் 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு, மார்ச் மாதத்தில் அரசு கருவூலத்தில் இருந்து அதற்கான நிதியும் விடுவிக்கப்பட்டது.
இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் அந்த நூல்கள் நூலக வளாகத்துக்கு வந்து சேர்ந்தன. தேர்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஜூன் மாதம்
அந்த நூல்கள் அடுக்குவதற் காகச் சரிபார்க்கப்பட்டு முத்திரையிடப்பட்டன. ஆனால், திமுகவினர் அந்த ஜூன் மாத முத்திரையை காட்டி எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர்.
செயற்கைநுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த குப்பை நூல்களை வாங்குவதற்காக திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய மையங்களுக்கு தலா ரூ.50 கோடியும், மின்நூல்களுக் காக ரூ.5 கோடியும் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
கடந்த 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஜனவரியில் 112 பேர் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவின் அழுத்தத்தின் காரணமாக இந்த நூல்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எழும்பூர் கன்னிமாரா நூலகத்திலும் கூட இதே பதிப்பகத்தின் போலி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் தாமரை முரளி, தாமரை ரவி, மோனிகா ரவி, லட்சுமி மோகன், பவித்ரா கருணாநிதி, ஸ்டாலின் போன்ற முகவரியற்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்கள் யார் என்றே தெரியவில்லை. இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து பெறப்பட்டநூல்களை தனியாகப் பிரித்து பேக் செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு செலவிட்ட தொகையை ஒரு ரூபாய் கூட விடாமல் முழுமையாக திரும்பப் பெற சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. அத்துடன், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிட்டு இந்தியாவின் முதல் ‘ஏஐ ஊழலை’ அரங்கேற்றிய திமுக, வாசகர்களிடமும், மாணவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
புத்தகம் வாங்குவதிலேயே இத்தனை கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கும்போது, அந்த நூலகக் கட்டிடங்களை அமைத்ததில் எத்தகைய ஊழல்கள் நடந்திருக்கும் என்பதை பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய 1,800 நூல்கள் அகற்றம்
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து வருகிறது. இந்நிலையில், முறைகேடு புகாருக்குள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்தில் இருந்து நேற்று அகற்றப்பட்டன.
அறிவுலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவிலும், 5 மற்றும் 6-வது தளங்களில் ஆங்கில நூல்கள் பிரிவிலும் மேற்கண்ட பதிப்பகங்களின் ஏறத்தாழ 1,800 நூல்கள் ரேக்கில் இருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து அவற்றை பெட்டியில் வைத்து வாசகர்கள் படிக்க முடியாதபடி மூடி வைத்தனர்.
அரசின் அடுத்தகட்ட உத்தரவுக்கு பிறகு அந்நூல்கள் சென்னையில் உள்ள நூலகத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது இங்கேயே விசாரணைக்காக பத்திரப்படுத்தி வைக்கப்படும் என அறிவுலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.