இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் | கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் சமூக வலைதளப் பதிவில், ‘தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது என காதர் மொகிதீன் கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், சையது ஃபரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், தமிழக ஆளுநருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது. சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் ஆளுநர் மேற்கொள்ளக் கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.