சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோரக் காவல் படை கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நவ. 13-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளதால் கடல் சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிர் மற்றும் உடைமை இழப்புகளைத் தவிர்க்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்திய கடலோரக் காவல் படையின் ரேடார் நிலையங்கள் மூலம் இந்த வானிலை மாற்றம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்குத் தகுந்த நேரத்தில் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைநிலை செயல்பாட்டு நிலையங்கள் மூலமாக, உயர் அலைவரிசை கருவிகள் வழியே பிராந்திய மொழிகளில் தொடர்ந்து புயல் எச்சரிக்கைகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன், துறைமுக அதிகாரிகளுக்கும் உரிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைப் பகுதிகளில் அவசர கால சூழல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்திய கடலோரக் காவல் படையின் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தேடல் மற்றும் மீட்புப்பணிகள் மற்றும் பேரிடர் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.