படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழகம்

“தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி அமையக் கூடாது. ஏனெனில்...” - கிருஷ்ணசாமி விவரிப்பு

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் எச்சரிக்கை

கி.மகாராஜன்

மதுரை: “2026-ல் ஒரு கட்சி ஆட்சி அமையக் கூடாது. ஒரு கட்சி மட்டும் ஆட்சி செய்யும்போது அடித்தட்டு மக்களின் நிலை தெரியாமலே போகிறது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மேலும், “இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்திய வேளாண் துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்” என அவர் எச்சரித்தார்.

அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இருப்பினும் தேர்தல் காலங்களில் பல்வேறு காரணங்களாக வாக்குகள் பிரிகின்றன. இதனால் புதிய தமிழகம் கட்சியின் வாக்குகளை ஒருங்கிணைத்து, அவற்றை பெரும் சக்தியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கருத்து கேட்டும் வருகிறோம். இப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு தொடர்பாக அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை அடிப்படையில் கூட்டணி இறுதி செய்யப்படும்.

          

தேர்தல் கூட்டணிக்கு இன்னும் நாட்கள் உள்ளன. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பவர்களே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துவிட்டு 36 நாட்களாக காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிய அரசு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்.

2026-ல் ஒரு கட்சி ஆட்சி அமையக் கூடாது. ஒரு கட்சி மட்டும் ஆட்சி செய்யும்போது அடித்தட்டு மக்களின் நிலை தெரியாமலே போகிறது. அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்,

கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு பின்னர் வெளியில் இருந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் பலனில்லை. கூட்டணி ஆட்சி இல்லை என்றால், அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. தனிக்கட்சி ஆட்சி என்பது காலனி ஆதிக்கம் போன்றதுதான்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும்போது அமைச்சரவையில் இடஒதுக்கீடு இல்லை என்றால் எப்படி? கூட்டணி அரசாக இருந்தால்தான், அது மக்களுக்கான அரசாக இருக்கும்.

புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறோம். வலுவான கூட்டணி அரசு, ஆட்சி மாற்றம், இவற்றை மையப்படுத்தியே புதிய தமிழகம் கட்சி செயலாற்றி வருகிறது.

இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருந்தது.

இந்தச் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. தற்போது இந்தியா - அமெரிக்கா இடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் டாலர் (ரூ.45 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வருகிறது. இதில் என்ன நடக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்காவில் இருந்து 500 மில்லியன் டாலர் பொருட்கள் குறிப்பாக விவசாய பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தால் இந்திய வேளாண் பொருட்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகும். அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணியக் கூடாது. இதுபோன்ற சூழல் ஆங்கிலேயே ஆட்சியின்போது இருந்தது. அதுபோன்ற அபாயம் இப்போது மீண்டும் வந்துள்ளது.

வணிக ஒப்பந்தத்தின் இந்தியா கையெழுத்திட்டால் இந்திய வேளாண்மை பெரியளவில் பாதிப்பை சந்திக்கும். இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்கா தீர்மானிக்கும் நிலை ஏற்படும். அமெரிக்காவின் போக்கு ஆபத்தானது. இந்தியா எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது.

மாஞ்சோலை தொழிலாளர்களை திமுக அரசு விரட்டி அடிக்கிறது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. ரேஷன் பொருட்களும் வழங்கவில்லை.

மாஞ்சோலையில் தொழிலாளர்கள் குடியிருக்கவில்லை. தமிழக அரசு நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் வேறு இடத்துக்கு செல்ல தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமிக்க நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT