“கடந்த முறை அதிகமான தொகுதிகளில் வென்றதால் இப்போது நாங்களே புதுச்சேரி இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்போம்” என்கிறது திமுக. “கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையில் தான் தேர்தலை சந்தித்தோம். இம்முறையும் நாங்களே தலைமை ஏற்போம்” எதிர்வாதம் செய்கிறது காங்கிரஸ்.
அதேசமயம் வெறும்பேச்சோடு விட்டு விடாமல் இம்முறை அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் நோக்கில் தொகுதி தோறும் செயல்வீரர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. போதாக்குறைக்கு, புதுச்சேரி மாநில திமுக ஒருங்கிணைப்பாளரான ஜெகத்ரட்சகன், “ஸ்டாலின் ஆட்சி புதுச்சேரியிலும் அமையும்" என கூட்டம் தவறாமல் சாம்பிராணி போடுகிறார்.
நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வென்ற தொகுதி. கடந்த முறை அவர் போட்டியிடாத தால் திமுக போட்டியிட்டு தோற்றது. இம்முறை அதை மீட்டெடுக்கும் திட்டத்துடன் மீண்டும் அங்கு தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறது திமுக.
அதே சமயம், முதல்வர் கனவில் மிதக்கும் நாராயணசாமியும் இப்போது நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வாக்காளர்களை வசப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நெல்லித்தோப்பு தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சிவா, “நெல்லித்தோப்பு தொகுதி திமுக-வின் கோட்டை. சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சித்தலைவராக, முதல்வராக இருந்துஇந்த தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.ஜானகிராமன். அவரது ஆட்சியில் தான் புதுச்சேரியில்மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழிற்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, குடிசை மாற்று வாரியம் எனஎண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற திமுக உறுதுணையாக இருந்தது. அதற்கு நன்றிக் கடனாக தற்போது அவர்மக்களுக்குப் பரிசுப் பொருட்களை கொடுத்து வருகிறார். அவரின் செயல்பாடு நமக்குத் தான் இங்கே வெற்றியை தேடித்தரும்" என்று நராயணசாமியை சீண்டினார்.
சிவாவின் பேச்சைக் கேட்டுவிட்டு பல்லை பதமாய்க் கடிக்கும் நாராயணசாமி வட்டாரம், தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக கடுஞ்சொல் எதையும் சொல்லாமல் அமைதி காக்கிறது. ஆனால், இதற்கு மேலும் எதையாவது பேசி நாராயணசாமியின் பொறுமையை திமுக-வினர் சோதித்தால் புதுச்சேரி இண்டியா கூட்டணிக்குள் இடி, மின்னல், மழைக்கு பஞ்சமிருக்காது.
சிவாவின் கருத்து பற்றி நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "நான் நெல்லித்தோப்பில் மட்டுமல்ல; ராஜ்பவன் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறேன். இது எங்கள் கூட்டணி. இதுபற்றி, எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்வோம்” என்கிறார்.