விசிக வேட்பாளர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, காங்கிரஸ் தான் காரணமென்று அக்கட்சியின் மீது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இவற்றில் உழவர்கரை தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.
ஆனால், அந்தத் தொகுதியில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவாக இருந்து விலகி இப்போது தனது கட்சியில் ஐக்கியமாகினவரை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. விசிகவுக்கு உழவர்கரை தொகுதியை ஒதுக்கியும் கூட காங்கிரஸ் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து, இன்று (வியாழக்கிழமை) திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசிகவுக்கென உழவர்கரை ஒதுக்கப்பட்ட பிறகும்கூட, தான் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற வைக்க புதுச்சேரி காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலையே ஏற்பட்டிருக்கிறது.
வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது.
எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஊசுடு தொகுதிக்கு அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கம் தொகுதிக்கு அமுதவன், உழவர்கரை தொகுதிக்கு செல்வ புஷ்பலதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.