தமிழகம்

காவல் நிலையங்களின் மாதாந்திர நிதி உயர்வு: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்கான மாதாந்திர நிதியை ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 என உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்காக முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

> போதைப் பொருள் பயன்பாட்டை திறம்பட ஒழிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், தலா ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

> பாதுகாப்பு, புலனாய்வு, விசாரணை உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்குவது உட்பட காவல் துறையை நவீனப்படுத்த ரூ.212 கோடி ஒதுக்கப்படும்.

> காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்கான மாதாந்திர நிதி ரூ.3,750-லிருந்து ரூ.30 ஆயிரமாகவும், ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாகவும், ரூ.8,250-லிருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த வசதி சிறப்புப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

> பணியின்போது சட்டம் - ஒழுங்கை காக்கும் நடவடிக்கையில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

> பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையும் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

> காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்த ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்படும்.

> ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

> காவலர் குடியிருப்புகளில் கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள் ரூ.36 கோடியில் புதுப்பிக்கப்படும்.

> வண்டலூர் அருகே உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் ரூ.23 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

> சேலம், விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூ.14 கோடியில் மரபணு ஆய்வுப் பிரிவுகள் அமைக்கப்படும்.

> தமிழகத்தில் 6 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் ரூ.12.84 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

> 15 இடங்களில் ரூ.65.90 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

> தீயணைப்பு துறைக்கு ரூ.60 கோடியில் 50 நீர்தாங்கி வண்டிகள், ரூ.17.50 கோடியில் 50 துரித மீட்பு ஊர்திகள், ரூ.60 கோடியில் 2 வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள், ரூ.8 கோடியில் 10 கனரக மீட்பு வாகனங்கள் வழங்கப்படும். மேலும், கண்காணிப்பு மற்றும் பளுதூக்கும் பணிகளுக்காக 35 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

> தீயணைப்புத் துறையில் ‘தீயணைப்போர்’ என்ற பதவி ‘தீயணைப்பு வீரர்’ என மாற்றப்படும்.

> புதிதாக பெண் தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்படுவர். பணியாளர்களுக்கு காவல் துறையினருக்கு இணையான சீருடைப்படி வழங்கப்படும்.

> பொங்கல் தினத்தன்று வழங்கப்படும் முதல்வரின் தீயணைப்புப் பணிகள் பதக்கத்தின் எண்ணிக்கையும், படித்தொகையும் உயர்த்தப்படும். மேலும், ரூ.3.20 கோடியில் 10 ஆய்வுக் குழுக்கள் கொண்ட புதிய ஆய்வுப் பிரிவும் அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT