சென்னை: நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கதொகையை அதிகரித்து முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது: விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர்.
தற்சமயம் தமிழ்நாட்டின் நிதிநிலைமை சரியில்லாமல் இருந்தாலும், நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என கருதி தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்க இருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையை சன்ன ரக நெல்லுக்கு 289 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 159 ரூபாய் உயர்த்தி குவிண்டாலுக்கு சன்னரகத்துக்கு ரூ.2750, பொது ரகத்துக்கு ரூ.2600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ.156க்கு அதிகமாக உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 709.50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும். வரலாற்றில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134க்கும் அதிகமாக சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.