வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.
சென்னை: பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள்
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை பழங்குடியினர் நலத் துறை வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு 357 மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் படிக்கச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறியதாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்களுக்கு சவாலான ஒன்று.
அதை தாண்டி படிக்க அவர்களுக்கு ஊக்கமளித்து வழிநடத்திச் செல்கிறோம். அதன்படி, வாசுகி பவுண்டேஷனுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து வருகிறோம்.
42 போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து, எங்களது மாணவர்கள் ஐஐடி, எம்ஐடி, நிஃப்ட், என்ஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் 80 பேர், பழங்குடியின மாணவர்கள் 277 பேர் போட்டித் தேர்வில் வென்று படிக்கச் சென்றுள்ளனர்.
கமலேஷ்
முதல் முறையாக ராஜீவ் காந்தி நேஷனல் ஏவியேஷன் பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவர் ஒருவர் படிக்கத் தேர்வாகி உள்ளார். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
கேரள ஐஐஐடியில் சேர்ந்துள்ள மாணவர் கமலேஷ் கூறியதாவது: எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமம். பெற்றோர் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போதே, உயர்கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று பழங்குடியின நலத்துறை ஆணையர் அண்ணாதுரை ஊக்கப்படுத்தினார்.
அதேபோல, சமூகநீதி துறை செயலர் சுப்பையன் வழிகாட்டுதல்படி, ‘குமிழி’ பயிற்சி மையம் மூலம் பயின்று ஜேஇஇ தேர்வில் 78 சதவீதம் பெற்று கேரளமாநிலம் கோட்டயத்தில் உள்ள ஐஐஐடி நிறுவனத்தில் பி.டெக் படித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு கூறியபோது, “முதல்முறையாக ஏவியேஷன் துறையில் எங்கள் மாணவர்கள் தடம் பதித்ததில் மகிழ்ச்சி.
இடஒதுக்கீட்டை தாண்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. முதல்வரின் ஆணைப்படி, இடைநிற்றல் மாணவர்கள் மீதும் கவனம் செலுத்தி நல்வழிப்படுத்தும் பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்றார்.
- மணிகண்டன் ஆறுமுகம்