திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டிலிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரும், வருமானவரித் துறையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அந்த வீட்டில், முறையான ஆவணங்கள் இல்லாமல், ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.1.78 கோடி மதிப்பிலான 1,250 கிராம் தங்க நகைகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி ரொக்கம் மற்றும் பொருட்களை மீட்டுள்ளனர். பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை ரூ.1.41 கோடி ரொக்கமும், ரூ.1.80 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’ என கூறப்பட்டுள்ளது.