சென்னை: வைர நகைக்கடை மற்றும் தனியார் நிறுவனம் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தியாகராயநகர், பசுல்லா சாலையில் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்நிறுவனம் ரசாயனங்கள், நிலக்கரி மற்றும் சாம்பல் கையாளுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதன் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இதன் அலுவலகங்கள் மற்றும் அவை தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள அலுவலகம், தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தலைமை அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், சென்னை அபிராமபுரம் முதல் குறுக்கு தெருவில் உள்ள தனியார் அலுவலகம் மற்றும் தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வைர நகைகள் விற்பனை செய்யும் ஜுவல்லரி உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பன போன்ற விவரங்கள் சோதனை முடிவடைந்த பின்னர் வெளியிடப்படும்’ என்றனர்.