மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

“எல் நினோ நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை இணைத்திடுக” - மு.வீரபாண்டியன்

வெற்றி மயிலோன்

சென்னை: 'எல் நினோ' தாக்கத்தை கணிக்க பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எல் நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் எல் நினோவால் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

அத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை தமிழ்நாடு முதல்வர் விஜய் அமைத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.

ஆனால், எல் நினோவின் தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில், இந்திய வானிலை ஆய்வு மைய பிரதிநிதி இல்லை என்பது அக்குழுவின் நோக்கம் முழுமையடைய உதவாது.

தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் சேகரிக்கிறது. தமிழகத்துக்கென பலவேறு இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது.

தமிழகத்தில் 56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது.

ஆனால், தமிழக அரசிடமோ அல்லது இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.

எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய பிரதிநிதி ஒருவரை இக்குழுவில் இணைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT