மு.அப்​பாவு, இன்பதுரை

 
தமிழகம்

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: 2016 தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்றதாக ஐகோர்ட் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2016 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நெல்லை மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் அதி​முக எம்​எல்​ஏ​வாக ஐ.எஸ்​.இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது என தீர்ப்​பளித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், திமுக வேட்​பாளர் மு.அப்​பாவு வெற்றி பெற்​ற​தாக உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நெல்லை மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் வழக்​கறிஞர் ஐ.எஸ்​.இன்​பதுரை​யும், திமுக சார்​பில் முன்​னாள் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ரான மு.அப்​பாவு ஆகியோ​ரும் போட்​டி​யிட்​டனர்.

இந்த தேர்​தலில் 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இன்​பதுரை வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​வி்க்​கக்​கோரி அப்​பாவு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2016-ல் தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், ராதாபுரம் தொகு​தி​யில் ஏற்​கெனவே திமுக சார்​பில் போட்​டி​யிட்டு 3 முறை வெற்றி பெற்​றுள்​ளேன். இந்த தேர்​தலில் என்னை எதிர்த்து அதிமுக சார்​பில் இன்​பதுரை உள்பட மொத்​தம் 15 பேர் போட்​டி​யிட்​டனர். வாக்கு எண்​ணும்​போது தபால் வாக்கு எண்​ணுவதை அதி​காரி​கள் பாதி​யில் நிறுத்​தினர்.

அதன்​பிறகு, அதி​முக​வினருடன் சேர்ந்து அதி​காரி​களும் முறை​கேட்​டில் ஈடு​பட்​டனர். திடீரென என்​னை​யும், திமுக முகவர்​களை​யும் வாக்​கும் எண்​ணும் மையத்​தில் இருந்து வலுக்​கட்​டாயமாக வெளி​யேற்​றினர்.

எனக்கு கிடைத்த 203 தபால் வாக்​குகளை தலைமை ஆசிரியர்​கள் சான்​றொப்​பம் செய்​துள்​ள​தாக கூறி செல்​லாது என அறி​வித்து நிராகரித்​தனர். இந்த தேர்​தலில் அதி​முக வேட்​பாளர் இன்​பதுரையை விட 599 வாக்​கு​கள் அதி​கம் பெற்று நான்தான் வெற்றி பெற்​றேன்.

ஆனால் அதி​முக வேட்​பாளர் ஐ.எஸ்​.இன்​பதுரை 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றுள்​ள​தாக தேர்​தல் அதி​காரி அறி​வித்​தார். இது சட்​ட​விரோதம் என்​ப​தால் இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும்.

நான் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்க வேண்​டும்’’ என கோரி​னார். இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2019 அக்.1 அன்று மறு​வாக்கு எண்​ணிக்கை நடத்த உத்​தர​விட்​டது.

அதன்​படி 2019 அக்.4 அன்று உயர் நீதி​மன்​றத்​தில் மறு​வாக்கு எண்​ணிக்கை தொடங்​கிய நிலை​யில், முடிவு​களை அறி விக்​கக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது.

இந்​நிலை​யில் கடந்த மாதம் இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே 2021 மற்​றும் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​கள் முடிந்து விட்​ட​தால் 2016-ல் தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கை நிலு​வை​யில் வைத்​திருப்​பது தேவையற்​றது எனக்​கூறி அந்த வழக்கை முடித்து வைத்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் நேற்று பிறப்​பித்​த தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தபால் வாக்​கு​களுக்கு பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் சான்​றொப்​பம் அளிக்க முடி​யும் என்​ப​தால் மறு வாக்கு எண்​ணிக்கை அடிப்​படை​யில் தபால் வாக்​கு​களில் அப்​பாவு 153 வாக்​கு​களை பெற்​றுள்​ளார். அதன்​மூலம் 104 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அப்​பாவு வெற்றி பெற்​றுள்​ளார்.

எனவே அதி​முக வேட்​பாளர் இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது. தற்​போதைய சூழலில் இன்​பதுரையை தகுதி நீக்​கம் செய்ய முடி​யாது என்​றாலும், 2016- 2021 கால​கட்​டத்​தில் சட்​டப்​பேரவை பதிவேடு​கள் உள்​ளிட்ட அரசு ஆவணங்​களில் ராதாபுரம் தொகு​தி​எம்​எல்ஏ என்ற இடத்​தில் இன்​பதுரை பெயரை நீக்​கி​விட்​டு, அப்​பாவு பெயரை இடம்​பெறச் செய்ய சட்​டப்​பேர​வைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதே​போல தவறான முறை​யில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்ட இன்​பதுரை இந்த கால​கட்​டத்​துக்கு எம்​எல்ஏ என்ற முறை​யில் பென்​ஷன் உள்​ளிட்ட சலுகைகளை கோர முடி​யாது.

உச்ச நீதி​மன்​றத்​தின் தலை​யீடு காரண​மாகவே இந்த தேர்​தல் வழக்​கில் முடிவு எடுக்க 10 ஆண்​டு​கள்​தாமத​மாகிவிட்​டது. நீதி​மன்​றங்​கள் ஏற்​படுத்​தும் இது​போன்ற தேவையற்ற தாமதங்​கள் ஜனநாயகத்​தின் ஆன்​மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்​பதை நினை​வில் கொள்ள வேண்​டும். இதே ரீதி​யில் இந்​திய நீதித்​துறை​யின் வருங்​கால பயணம் அமைந்​தால் நம்​முடன் சுதந்​திரம் பெற்ற மற்ற அண்டை நாடு​களில் நில​வும் சூழல் இந்​தி​யா​விலும் அரங்​கேறி​விடும்.

இவ்​வாறு நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் தெரி​வித்​துள்​ளார். தீர்ப்பு குறித்து முன்​னாள் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ர் மு.அப்​பாவு கூறும்போது, ‘‘10 ஆண்​டு​கள் தாமத​மாக இந்த தீர்ப்பு கிடைத்​தா​லும் எனது 10 ஆண்​டு​கால மன உளைச்​சலுக்கு வலி நிவாரணி​யாக நீதி கிடைத்​திருப்​பது மகிழ்ச்​சி​தான்’’ என்​றார்.

இந்​நிலை​யில் தற்​போது அதிமுக எம்.பி.​யாக பதவி வகிக்​கும் ஐ.எஸ்​.இன்​பதுரை, ‘‘சென்னை உயர் நீதி​மன்​றத்​தின்​ இந்​த தீர்ப்பை எதிர்த்​து உச்​ச நீதி​மன்​றத்​தில்​ மேல்​முறை​யீடு செய்​வேன்​’’ என்று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT