சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு ஓரளவு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்விதத் தடுப்பூசியும் போடாததால், நகரப் பகுதிகளைவிட நாய்க்கடி பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகம் உள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டில் நாய்க்கடியால் 6 லட்சத்து 25,700 பேர் பாதிக்கப்பட்டதில், 34 பேர் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13 பேர் ரேபிஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 12,177, திருச்சியில் 9,939, திருவள்ளூரில், 9,265, திண்டுக்கல்லில் 8,239, விழுப்புரத்தில் 8,213 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “நாய், பூனை, குரங்கு கடித்த காயங்களை முறையாக, கிருமிநாசினி கொண்டு துாய்மைப்படுத்தாமல் இருந்தால் தொற்று ஏற்படும். தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தால் ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்க முடியாது.
ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சேர்த்து, ஆர்ஐஜி எனப்படும் ரேபிஸ் இன்யூனோகுளோபளின் தடுப்பு மருந்து செலுத்தலாம்.
முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21-வது நாள் என 4 தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இம்யூனோ குளோபளின் மருந்தானது முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும். காலதாமதாகவோ அல்லது அதை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலன் இல்லை. இதைக் கடைபிடித்தால் ரேபிஸ் நோய் தொற்றை தடுக்கலாம்” என்றனர்.