தமிழகம்

புதுச்சேரியில் திமுக, பாஜகவை விட தவெகவுக்கு அதிக வாக்கு சதவீதம்!

நாதக 2.01% விசிக 0.53%

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக, பாஜகவை விட தவெக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிக ளில், திமுக 5 , பாஜக 4, தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

தவெகவை விட திமுக, பாஜகவுக்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கிடைத்திருப் பதாக தெரியலாம். ஆனால் வாக்கு சதம் இரு கட்சிகளை விட தவெகவுக்கு அதிகம்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் 91.23 சதம் வாக்குப் பதிவானது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடந்தது. புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதான தேசிய, மாநில அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றி உள்ளது.

முதல் தேர்தலிலேயே, 2 பிரதான கட்சிகளான பாஜக மற்றும் திமுகவை தவெக முந்தியுள்ளது. வழக்கம் போல என்.ஆர்.காங்கிரஸ் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது.

16 தொகுதிகளில் போட்டி யிட்டு 1 லட்சத்து 98 ஆயிரத்து 219 ஓட்டுகளை பெற்று, 23.12 சதவீத வாக்குகளுடன் என்ஆர்.காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

22 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 492 ஓட்டுகளை பெற்று, 17.5 சதவீதத்துடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக, தவெக புதுவை அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

30 தொகுதிகளில் களம் கண்ட தவெக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 477 வாக்குகளை குவித்து 16.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் 2 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.

தவெக 3-ம் இடத்தை பிடித்துள்ளது. திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 36 வாக்குகள் பெற்று 13.7 சதவீதத்துடன் 4-ம் இடத்தையும், 10 தொகுதிகளில் களம் கண்ட பாஜக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 583 வாக்குகள் பெற்று 12.19 சதவீதத்துடன் 5-ம் இடத்தை பிடித்துள்ளது.

2 தொகுதிகளில் போட்டி யிட்ட அதிமுகவில், உப்பளம் தொகுதியில் அன்பழகனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. இக்கட்சி பெற்ற வாக்குச் சதம் 1.09. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத் தேர்தலில் 0.05 வாக்குச் சதவீதத்தையும், மார்க்சிஸ்ட் கட்சி 0.06 சதத்தையும்,நாதக 1.36 சதவீதத்தையும் பெற்றுள்ளன. விசிக 0.14 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 25.85 சதம் வாக்குகள் பெற்றது. திமுகவுக்கு 18.51 சதம். காங்கிரஸ் கட்சிக்கு 15.71 சதம். பாஜகவுக்கு 13.66 சதம். அதிமுகவுக்கு 4.14 சதம். நாதக 3.37 சதம். விசிகவுக்கு 0.67 சதம்.

கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 2.73 சதம் வாக்குகள் குறைவாகவும், திமுக 4.77 சதம் குறைவாகவும், பாஜக 1.47 சதம் குறைவாகவும், அதிமுக 3.05 சதம் குறைவாகவும், நாதக 2.01 சதம் குறைவாகவும், விசிக 0.53 சதம் குறைவாகவும் பெற்றுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் புதிதாக போட்டியிட்ட தவெகதான். இந்தக் கட்சிக்கு வாக்குகள் பிரிந்து சென் றுள்ளன. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கூடுதலாக கடந்த தேர்தலைக் காட்டிலும் 1.83 சதம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

அதற்குக் காரணம் 6 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பா ளர்கள் களத்தில் இருந்துதான். ஆனாலும் கடந்த தேர்தலை விட வேட்பாளர் வெற்றி சரிந்து, வெற்றி பெற்ற வேட்பாளர் ஒரே ஒருவராக சுருங்கியுள்ளது.

SCROLL FOR NEXT