கோப்பு படம்

 
தமிழகம்

மதுரையில் ‘பார்க்கிங்’ இல்லாமல் தொடங்கப்படும் ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள்

நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகர சாலைகளில் சமீபகாலமாக ‘பார்க்கிங்’ இல்லாமல் ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்கள், ஜவுளிக்கடைகள் புற்றீசல் போல் அதிகளவு தொடங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மாநகரில் திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி ஒரு வணிகக் கட்டிடம் கட்டப்படும் போதும், குடியிருப்பு கட்டிடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றும் போதும் அதன் பரப்பளவுக்கும், வாடிக்கையாளர்கள் வருகைக்கு தகுந்தவாறும் குறிப்பிட்ட அளவு வாகன நிறுத்துமிடமாக இடம் ஒதுக்க வேண்டும்.

வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்துவது கட்டாயம் என பல வழக்குகளில் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ‘பார்க்கிங்’ இடமாக வரைபடத்தில் காட்டிவிட்டு, அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தினாலோ, அல்லது முறைகேடாக ‘பார்க்கிங்’ இல்லாமலேயே இயங்கும் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி ‘சீல்’ வைக்க மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை மாநகராட்சியில் நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள், வணிக கட்டிடங்களில் ‘பார்க்கிங்’ வசதி நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், மாநகர சாலைகள் அனைத்திலும் சமீப காலமாக புற்றீசல் போல் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சிறிய, பெரிய ஹோட்டல்கள், ஜவுளிக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நவீன காய்கறி கடைகள், பேக்கரி கடைகள் போன்றவை பார்க்கிங் வசதி இல்லாமலேயே தொடங்கப்படுகின்றன.

இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்கள், இருசக்கர வாகனங்களை  சாலையிலேயே பார்க்கிங் செய்துவிட்டு ‘ஷாப்பிங்’ செல்வது, உணவு சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் கழித்து வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.

சாலைகளில் சாதாரண தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள், இட்லி கடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், மாநகர போக்குவரத்து போலீஸார் போட்டிபோட்டு மிரட்டியும், அபராதம் விதித்தும் அப்புறப்படுத்துகின்றனர்.

ஆனால், பெரும் முதலாளிகள், அரசியல் செல்வாக்குடன் இருப்பவர்கள், பகிரங்கமாக ‘பார்க்கிங்’ இல்லாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ‘ஜோராக’ வியாபாரம் நடத்தி வருகின்றனர். நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் ‘பார்க்கிங்’ வசதியில்லாமல் ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், ஜவுளி கடைகள், சூப்பர்மார்க்கெட்கள் அதிகளவு செயல்படுகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மாநகராட்சி நகர்நலப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்தால், சாக்கு போக்கு கூறி நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கின்றனர். பெரிய வர்த்தக நிறுவனங்கள் மீது மறந்தும் கூட மாநகர போலீஸார், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதில்லை. பல வணிக நிறுவனங்கள் பெயரளவுக்கு தங்கள் இடத்துக்கு அருகிலோ அல்லது தரைகீழ்த்தள (அண்டர் கிரவுண்ட்) கட்டிடங்களை ‘பார்க்கிங்’ ஆக காட்டி மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அனுமதி பெறுகின்றனர். நகரமைப்பு பிரிவு அதிகாரிகளும் அவர்களுக்கு அனுமதி வழங்குவதோடு சரி, விதிமீறலை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை, என்றனர்.

இது தொடர்பாக கருத்து கேட்க மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி முரளியை பலமுறை தொடர்புகொண்டும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

SCROLL FOR NEXT