மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தவிர, முக்கிய நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் ‘சீட்’ கேட்டு திமுக மேலிடத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.
அவருடன் முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக கவுன்சிலர்கள் குழு தலைவரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா.ஜெயராம், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, நிர்வாகிகள் சின்னம்மாள், சவுந்தர், பி.டி.மணிமாறன், சுபாஷ், கவுன்சிலர் நூர்ஜகான் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் ‘சீட்’ கொடுக்க வேண்டும் என்று மத்திய தொகுதியை சேர்ந்த அவரது ஆதரவு நிர்வாகிகள் 15 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை முதல்வர் இறுதி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விருப்ப மனு கண் துடைப்புக்காக பெறப்படுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, வடக்கு, மேற்கு, கிழக்கு, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை பொருத்து, மேலும் ஒரு தொகுதியில் கூடுதலாக போட்டியிடலாம். இந்நிலையில், பழனிவேல் தியாகராஜனுக்கு போட்டியாக முக்கிய நிர்வாகிகள் 15 பேர் வரை மத்திய தொகுதியில் ‘சீட்’ கேட்டு விருப்ப மனுக்களை வெளிப்படையாகவே கொடுத்துள்ளது ஆ்ச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அமைச்சருக்கே மீண்டும் ‘சீட்’ கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய தொகுதியில் கட்சி நிர்வாகி களிடையே முட்டல், மோதல் போக்கே உள்ளது. அவர்களை சமாதானம் செய்யாவிடில், தேர்தலில் உள்ளடி வேலை பார்க்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.
அதனாலேயே, சமீபத்தில் மதுரை வந்த முதல்வரின் மருமகன் சபரீசன், மாநகர் செயலாளர் தளபதி, முக்கிய நிர்வாகிகளை அழைத்து, பழனிவேல் தியாகராஜனே மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட ஒத்துழைப்பு வழங்கவும், அவரது வெற்றிக்கு தேர்தல் பணியாற்றவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.